நன்னூல் - சிறப்புப்பாயிரம் - பொதுப்பாயிரம்: முனைவர். ம. உஷாராணி
𝟭 நன்னூல் – தமிழின் சிறந்த இலக்கண நூல் தமிழ் மொழியின் பெருமைக்கும் தொன்மைக்கும் சான்றாக விளங்குபவை அதன் இலக்கண நூல்கள் ஆகும். தமிழ் இலக்கணத்தின் தொடக்கமாகக் கருதப்படுவது அகத்தியம் (பேரகத்தியம்) ஆகும். இதனை இயற்றியவர் அகத்தியர் எனக் கூறப்படுகிறது. தமிழில் தோன்றிய முதல் இலக்கண நூல் அகத்தியம் என்பதற்கான குறிப்புகள் கிடைத்தாலும், அந்நூல் முழுமையாக இன்று கிடைக்கவில்லை. அகத்தியரின் மாணாக்கரான தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் தான் தற்போது கிடைக்கக்கூடிய மிகப் பழமையான தமிழ் இலக்கண நூலாகப் போற்றப்படுகிறது. அகத்தியம் முதல் நூலாகவும், தொல்காப்பியம் அதன் வழிநூலாகவும் கருதப்படுகிறது. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது இயல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் இலக்கணத்தின் அடிப்படை அமைப்பைத் தெளிவாக விளக்கும் பெருமை தொல்காப்பியத்திற்கு உண்டு. தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு, அதனைத் தொடர்ந்து தோன்றிய சிறந்த இலக்கண நூலே பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் ஆகும். தொல்காப்பியத்தின் கருத்துகளை ஆழமாக உணர்ந்த பவணந்தி முனிவர், தமது காலத்தி...